உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல், பழநியில் ஆடிப்பெருக்கு விழா

திண்டுக்கல், பழநியில் ஆடிப்பெருக்கு விழா

திண்டுக்கல்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு திண்டுக்கல் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம் ஸ்ரீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர் கோயில், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள், வெள்ளை விநாயகர், 108 விநாயகர் ஆகிய கோயில்களில் நேற்று ஆடிப்பெருக்கு விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பூக்குழி இறங்கி வேண்டுதல்: திண்டுக்கல்லில் வெக்காளியம்மன் கோயில் உற்சவ விழா நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றினர். இரவு பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பழநியில் விழா: பழநி பெரியநாயகியம்மன், திருஆவினன்குடி, பெரியாவுடையார் கோவில்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து பெரியாவுடையார் கோயிலுக்கு உமாமகேஸ்வரர், உமாமகேஸ்வரி, விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் புறப்பாடு நடந்தது. மூலவர் பெரியாவுடையாருக்கு 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. கோயிலின் முன்புள்ள சண்முகநதி தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. எனவே தற்காலிகமாக தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் சப்தகன்னிகள் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கோதைமங்கலம், பாலசமுத்திரம், அ.கலையம்புத்துார், வண்டிவாய்க்கால் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக வந்தனர். சண்முகநதி ஆற்றங்கரையில் களிமண் எடுத்து அதில் சப்த கன்னிமார்களை வடிவமைத்து பூஜை செய்தனர். சிறுவர், பெரியவர்கள் தேங்காயில் நீரை எடுத்துவிட்டு அவல், கடலை, பாசிப்பயறு, எள்ளு, நாட்டுசர்க்கரை நிரப்பி, தீயில் தேங்காயை சுட்டு, சுவாமிக்கு படைத்து வழிபட்டு அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர்.

சாணார்பட்டி:  சாணார்பட்டி ஒன்றிய பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில் விழா நடந்தது. அஞ்சுகுழிப்பட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள படுகைக்காடு கிராமத்தில் வெள்ளையம்மாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆடிப்பெருக்கு தினத்தில் விழா எடுத்து கிடா வெட்டி அன்னதானம் நடக்கும்.இதற்காக கடந்த ஜூலை 25 அன்று மதுரை அழகர்கோயில், சிறுமலை கொங்கனுாத்து பகுதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மறுநாள் அபிஷேகம் செய்து சாமி சாட்டுதலுடன் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு விழாவில் புராண நாடகம் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோயில் சார்பில் 50 க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி பரிமாறப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

ஆத்துார்: அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்கள், பாறைகளில் ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேற்குதொடர்ச்சி மலை குகைக்கோயிலில் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பலர் பால் காவடி, பன்னீர்காவடி, பறவைக்காவடி, உடலில் அலகு குத்தி வந்தனர்.

கன்னிவாடி; தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், ஆத்துார் காசி விசுவநாதர் கோயில்களில் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

சின்னாளபட்டி;  பாலநாகம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை, வளைகாப்பு விழா நடந்தது. நேற்று முன்தினம், பிருந்தாவனத் தோப்பில் கரகம் எடுத்தல் நடந்தது. பக்தர்கள், அக்னிச்சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், கரும்புத்தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், அம்பாத்துறை வீரபக்த ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி பை-பாஸ் ரோடு சந்தனக்கருப்பணசுவாமி கோயிலிலும் ஆராதனைகள் நடந்தது.

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். பண்ணைக்காடு மயான காளியம்மன், கானல்காடு பூதநாச்சியம்மன், தாண்டிக்குடி சந்தனகருப்பு சுவாமி, சீலைக்காரி அம்மன், காமாட்சியம்மன், சோனை சுவாமி கோயில்களில் விசேஷ பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !