உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்

வத்திராயிருப்பு மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்

வத்திராயிருப்பு: வரலட்சுமி விரத வழிபாட்டை முன்னிட்டு, வத்திராயிருப்பு மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து கர்ப்பிணிகளுக்கும், பெண்களுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது.

வத்திராயிருப்பு பலகுடி கீழத்தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வரலட்சுமி விரத வழிபாடு கொண்டாடப்படுவது வழக்கம்.   இதையொட்டி அம்மனுக்கு பல ஆயிரம் வளையல்களை கொண்டு அலங்காரமும், கர்ப்பிணிகளையும், திருமணம் முடிந்த பெண்களையும், குழந்தையில்லாத தம்பதியினரையும் அழைத்து வளைகாப்பும் நடத்தப்படும்.  ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்களை வாங்கி அணிந்து கொள்வார்கள்.  பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்திருவிழா கோயிலில் நடந்தது.

இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.  10 ஆயிரம் வளையல்களை கொண்டு அம்மனுக்கு கிரீடத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோயில் முழுவதும் வளையல்களால் பந்தலும் அமைக்கப்பட்டது.   கர்ப்பிணிகள், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள்,  திருமணமாகாத பெண்கள் அனைவரும் கோயிலுக்கு முன்பாக அமரவைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.  பின்னர் சுமங்கலி பெண்களை அழைத்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட வளையல்களை எடுத்து முதலில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கும், பின்னர் திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கும் அணிவிக்கப்பட்டது.   அவர்களது முகத்தில் சந்தனம் பூசப்பட்டு குழந்தை வேண்டியும், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் வேண்டியும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.  அன்னதானமும் பெண்களுக்கு வளையல் தானமும் நடந்தது.  மகளிர் விழாக்கமிட்டி தலைவி திருப்பதி, நிர்வாகிகள் தனலட்சுமி, செல்வி, மரியம்மாள், அனிதா, ராணி, சுப்புலட்சுமி, ராதிகா உட்பட குழுவினர் ஏற்பாடு செய்தனர்.  ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !