தேவதானப்பட்டியில் திருமணத்தடை நீக்கும் சுந்தர விநாயகர் கோயில்
தேவதானப்பட்டி: மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மஞ்சளாற்றங்கரையில்
அமைந்துள்ள திருமணத் தடை நீக்கி, குழந்தைவரம் தரும் சுந்தர விநாயகர் கோயில்
மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற ஆன்மிக ஸ்தலமாகும். இங்கு வரும் பக்தர்கள் முதலில் மஞ்சளாற்றிற்கு சென்று ஆற்றங்கரையில் அமர்ந்துள்ள சுந்தர விநாயகரை வழிபட்டு, அதன் பிறகு அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
200 ஆண்டுகள் மிகவும் பழமையான இக்கோயிலில் தேவதானப்பட்டியை மையப்படுத்தி உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கோயில் திருவிழா, கும்பாபிஷேகம் செய்ய மஞ்சளாற்றில் நீர் எடுத்து விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து சம்பந்தப்பட்ட கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர். இக்கோயிலில் அர்த்த மண்டபத்தின் மேற்பகுதியில் 12 ராசிகள், கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. விநாயகரை வணங்கும் பக்தர்கள் மேலே உள்ள ராசிகளை வணங்கி பயன் பெற்று வருகின்றனர். நவக்கிரகங்களும் உள்ளன.
காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா காலங்களில் சுந்தர விநாயகர் கோயிலில் இருந்து பூ, பழங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதனை கோயிலுக்கு கொண்டு செல்லும் பல்லையம் என்ற நிகழ்ச்சி இன்றும் வழக்கத்தில் உள்ளது.
மேலும் இக்கோயிலில் வேண்டுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கிறது. நீண்டகாலமாக இருந்த திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கிறது. இதனை கோயிலுக்கு வரும் பலர் கூறுவதை கேட்க முடிகிறது. மேல்விபரம் அறிய பூஜாரி ஆறுமுகத்தை 99651 10511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.