குச்சனூர் மூலவருக்கு மஞ்சள் காப்பு
சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் மூலவருக்கு மஞ்சள் காப்பு சாத்தப்பட்டது. சோணை கருப்பசாமிக்கு மது படையல் ஆக., 14ல் நடக்கிறது.தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார விழா ஜூலை 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மூலவர் சுயம்பு என்பதால், அவருக்கு அனுகிரக மூர்த்தியாக உருவம் கொடுக்க மூலிகை கலந்த மஞ்சள் காப்பு சாத்தப்படும். ஆண்டு முழுவதும் நல்லெண்ணெய் பூசி பாதுகாக்கப்படும். இந்த அலங்காரம் மூன்றாவது ஆடி சனிவார விழா நிறைவடைந்து நடை அடைத்த பின் களையப்பட்டு, புதிதாக மஞ்சள் காப்பு சாத்தப்படும்.இந்தாண்டு நேற்று முன்தினம் சனிவார விழா நிறைவடைந்த பின் தலைமை அர்ச்சகர் திருமலைஜெயபால் முத்து, உதவி அர்ச்சகர்கள் சிவக்குமார், கோபிநாத், முத்துக்கண்ணன் கொண்ட குழுவினர் இரவு முழுவதும் மஞ்சள் காப்பு சாத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக மூலிகை, படிகாரம், மஞ்சள், நல்லெண்ணெய் கலந்த கலவை கடந்த 20 நாட்களுக்கு முன்பே தயார் நிலையில் வைக்கப்பட்டது.
மது படையல் : ஆக., 14ல் கோயில் வளாகத்தில் உள்ள சோணை கருப்பசாமிக்கு மது படையல் வைத்து, பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்படும். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வழங்கும் மது பாட்டில்களை அறநிலையத்துறையினர் சேகரித்து இரவு பூஜைக்கு வழங்குவர். உபயதாரர்கள் வழங்கும் ஆடு, கோழிகளை சமைத்து கறி விருந்து நடக்கும்.