உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் ஆடித்தேரோட்டம்: கோவிந்தா கோஷத்துடன் வீதிவலம்

பரமக்குடியில் ஆடித்தேரோட்டம்: கோவிந்தா கோஷத்துடன் வீதிவலம்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ தேரோட்டம் ரதவீதிகளில், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் வலம் வந்தது. இக்கோயிலின் ஆடி பிரம்மோற்ஸவ விழா கடந்த ஜூலை 30 ல் கொடியேற்றப்பட்டு நடந்து வருகிறது. தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வந்தார். நேற்று முன்தினம் நவநீத கண்ணன் அலங்காரத்திலும், இரவு குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார். நேற்று காலை 10 :00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை நடந்து தேர், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன், ரதவீதிகளில் வலம் வந்தது.

சுமார் 3 மணி நேரம் சுற்றி வந்த தேர் மதியம் 1 :00 மணிக்கு நிலை அடைந்தது. நேற்று வெயில் தாக்கம் குறைந்த மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பின்னர் தேரில் இருந்து கோயிலுக்கு எழுந்தருளிய பெருமாளுக்கு 108 தேங்காய்கள் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மலர்களால் அர்ச்சனை செய்தவாறு மாட வீதிகளில் பெருமாளை தாலாட்டி அழைத்து வந்தனர். பின்னர் சுந்தரராஜபவனத்தில் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தும், அன்னம் சாப்பிட்டு சென்றனர். இரவு சந்திரகிரகணத்தையொட்டி, சயனத்திருக்கோலத்தில் பெருமாள் மாலை 5 :00 மணிக்கு வீதிவலம் வந்து பின்னர் இரவு 7:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இன்று காலை தீர்த்தவாரி நிறைவடைந்து, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !