கருட வாகனத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் பவனி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் நேற்று, கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜப் பெருமாள் கோவிலில், ஆண்டுக்கு மூன்று முறை, கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வார். முதலில், வைகாசி பிரம்மோற்சவம், அதன் பின் ஆனி மாத கருட உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதையடுத்து நேற்று, ஆடி பவுர்ணமியை ஒட்டி, கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை, 5:00 மணிக்கு, கண்ணாடி அறையில் இருந்து, வாகன மண்டபத்திற்கு சென்ற பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து, அனந்த சரஸ் குளத்திற்கு சென்று, கஜேந்திர மோட்சம் முடிந்த பின், வெளியில் கோபுர தரிசனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நான்கு மாட வீதி, ஆனைக் கட்டி தெரு வழியாக சென்ற பெருமாள் பவனி இரவு, 8:30 மணிக்கு மீண்டும் கோவிலை சென்றடைந்தது.