மயிலை கபாலீஸ்வரருக்கு தங்க நாகாபரணம்
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் மூலவருக்கு, இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள, 8 கிலோ தங்கத்தாலான நாகாபரணம் தயாரிக்கப்படுகிறது. சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்றதுஇத்தலம். சாபத்தால் மயில் உருவாக இருந்த பார்வதி, இத்தலத்தில் புன்னை மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பூஜித்து, சாப விமோசனம் பெற்றதாக ஐதீகம். இந்த கோவிலில் உள்ள மூலவர் கபாலீசுவரருக்கு, சிறப்பு பூஜை நேரங்களில் செப்பில், தங்க முலாம் பூசிய நாகாபரணம் சார்த்தப்படுகிறது. இந்நிலையில், மூலவருக்கு சொக்க தங்கத்தாலான நாகாபரணம்வழங்க, கோவில் தக்கார் விஜயகுமார் ரெட்டி, பிரீத்தி ரெட்டி ஆகியோர் முன் வந்தனர்.இதையடுத்து, இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில், 8 கிலோ எடையுள்ள நாகாபரணத்தை, உம்மிடி பங்காரு ஸ்ரீ ஹரி சன்ஸ் மூலம், மூன்று மாதங்களில் செய்து முடித்து, மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.