அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட அம்மன் கோவில்களில், தீமிதி திருவிழா நடந்தது. மணவாளநகர் அடுத்த, காவாக்கரை பகுதியில் அமைந்துள்ளது இளங்காளியம்மன் கோவில். இங்கு, 9ம் ஆண்டு ஆடி திருவிழாவும், 4ம் ஆண்டு பூமிதி திருவிழாவும் கடந்த, 4ம் தேதி துவங்கியது. அதன் பின், அன்று காலை, வரதராஜபுரம் வேப்பமரத்தடியில் ஊர்கூடி பொங்கல் வைத்தலும், இளங்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மாலையில், சுமங்கலி திருவிளக்கு பூஜை நடந்தது. மறுநாள், 5ம் தேதி காலை, வரதராஜ நகர் விநாயகர் கோவிலிலிருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, இளங்காளியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூமிதி திருவிழா, கடந்த 6ம் தேதி, நடந்தது. இதில், விரதமிருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் பின், சிறப்பு மலர் அலங்காரத்தில், உற்சவர் இளங்காளியம்மன் வீதிஉலா நடந்தது. இதேபோல், மப்பேடு மற்றும் விஸ்வநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஓசூரம்மன் கோவில்களிலும், தீமிதி திருவிழா, அம்மன் வீதிஉலா நடந்தது.