முத்து வாழியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று மீண்டும் ஒரு கோவிலில் உண்டியல் உடைத்து திருடப்பட்டது. பாக்குமுடையான்பேட்டையில் உள்ள முத்து வாழியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக உண்டியல் பணம் எண்ணப்படாமல் உண்டியலை கோவில் நிர்வாகிகள் சீல் வைத்தி ருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கோவில் பூசாரி கோவிலுக்கு சென்றபோது, உண்டியல் சீல் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், பூட்டு போடப் பட்டிருந்தது. சந்தேகமடைந்த பூசாரி, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். உண்டியலில் இருந்த பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள், சந்தேகம் ஏற்படாதவாறு பூட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு கோவில்களில் உண்டியல் உடைத்து திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.