நெகமம் பத்ரகாளியம்மன் கோவிலில் குருபூஜை விழா
ADDED :2983 days ago
பொள்ளாச்சி : நெகமம் பத்ரகாளியம்மனுக்கு குலதெய்வ வழிபாடு மற்றும் குழந்தையானந்தசாமி குருபூஜையும் நடந்தது. நெகமத்தில், சந்தைக்கு அருகில் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலில், ஆண்டுதோறும் அம்மனுக்கு விழா நடக்கிறது. கோவிலில் நேற்று, குலதெய்வ வழிபாடும், குழந்தையானந்தசாமி குருபூஜை விழாவும் நடந்தது. முதல் நாளான நேற்று முன்தினம், தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், சக்தி அழைப்பு ஆகியன நடந்தன. நேற்று காலை திருவிளக்கு வழிபாடு, கோமாதா பூஜை, விநாயகர் வழிபாடு மற்றும் பராசக்திக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பத்ரகாளியம்மன் திருவீதி உலா நடந்தது. முளைப்பாரி மற்றும் மாவிளக்குடன் பக்தர்கள் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.