மதுரை மீனாட்சி கோயில் கல் தூண்கள் கண்காட்சியாக பாதுகாக்கப்படுமா?
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அகற்றப்படும் கல்துாண்களின் சிற்ப கலையை சுற்றுலா பயணிகள் அறியும் வகையில் கண்காட்சியாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இக்கோயிலில் பல ஆண்டுகளாக பகுதி பகுதியாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் பொற்றாமரைக்குளத்தின் தெற்கு பகுதியில் உள்ள கல் துாண்கள் அகற்றப்பட்டு புதிய கற்கள் பொருத்தப்பட்டன. அகற்றப்பட்ட பழைய துாண்கள் எல்லாம் அனுப்பானடியில் உள்ள கோயில் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது கோயில் கிழக்கு பகுதியில் அகற்றப்பட்ட துாண்கள் ஆடி வீதியில் வைக்கப்பட்டுள்ளன. கட்டடக் கலைக்கு பெயர்பெற்ற மீனாட்சி கோயிலின் கலைநயமிக்க கற்கள் இப்படி அடையாளம் தெரியாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. சிற்ப கலைகளை உள்ளடக்கிய கற்கள் பாதுகாப்பின்றி தேய்ந்துவருகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, கோயில் நிர்வாகம் இதுபோல அகற்றப்பட்ட கற்களை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக கோயில் வளாகத்தில் கண்காட்சியாக வைத்து பாதுகாக்க வேண்டும்.