ஆறுமுகநேரி கோயில் கும்பாபிஷேக திருப்பணி பூமிபூஜையுடன் துவக்கம்
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஆறுமுகநேரியில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் பாத்தியப்பட்ட சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு கன்னி விநாயகர், சுப்பிரமணியர், லிங்கேஸ்வரர், தட்சினாமூர்த்தி, சனீஸ்வர பகவான், துர்க்கை அம்மன், நவகிரகம், சண்டிகேஸ்வரர், நடராஜர் சபை ஆகிய சன்னதிகள் தனித்தனியாக உள்ளது. மேலும் சோமநாத சுவாமி சோமசுந்தரி அம்மன் தனித்தனி சன்னதியாக உள்ளது. இக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சுமார் ரூ.15 லட்சம் செலவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கும்பாபிஷேக திருப்பணி ஆரம்ப பூமிபூஜை விழா நடந்தது. கன்னிவிநாயகருக்கு சிறப்பு ஆராதனை, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பூமி பூஜை நடந்தது. இதனை திருவாவடுதுறை ஆதீன தென்மண்டல மேலாளர் சங்கர சுப்பிரமணியன், திருச்செந்தூர் ஆதீன கண்காணிப்பாளர் குற்றாலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கோயில் மணியம் சுப்பையா, சிவாச்சாரியார் ஐயப்பன், பக்த ஜன சபை தலைவர் சண்முகவெங்கடேசன், செயலாளர் கந்தையா, பொருளாளர் அரிகிருஷ்ணன், தொழிலதிபர் தவமணி, நகர்நல மன்ற தலைவர் பூபால்ராஜன், நடராஜ தேவார பக்த ஜன சபையைச் சேர்ந்த வடபழனி லெட்சுமணன், வக்கீல் சுப்பிரமணியம், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.