தேவிபட்டினம் சக்கர தீர்த்தகுளம் தூர்வார பக்தர்கள் வலியுறுத்தல்
தேவிபட்டினம், தேவிபட்டினம் நவபாஷாணம் எதிரே அமைந்துள்ள சக்கர தீர்த்த குளத்தை துார்வாரி சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேவிபட்டினம் நவபாஷாணத்தில் திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கும், தர்ப்பணம், ஏவல், பில்லி உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் பரிகார பூஜை செய்யப்படுகின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நவபாஷாணத்தில், நவக்கிரகங்களை சுற்றி வந்து கடல் நீரில் புனித நீராடும் பக்தர்கள் பின்பு எதிரே உள்ள நல்ல தண்ணீரான சக்கர தீர்த்த குளத்தில் குளித்து தங்களது உடைகளை மாற்றிச் செல்கின்றனர். இந்த குளத்தில் தண்ணீர் பல ஆண்டுகளாக தேங்கி கிடந்ததால் தண்ணீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் தேங்கி கடந்த மாசடைந்த தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. குளத்தின் அடியில் தேங்கி கிடந்த சேறு கலந்த கழிவு அகற்றப்படடவில்லை. இதனால் சுமார் இரண்டு அடி ஆழம் வரை கழிவு குளத்தில் படிந்துள்ளன. மழைகாலம் துவங்கி குளத்தில் தண்ணீர் தேங்கும் பட்சத்தில் குளத்து நீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட மாவட்ட நிர்வாகம் மழைக்காலம் துவங்கும் முன் சக்கர தீர்த்த குளத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.