விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்
உடுமலை: திருப்பூர் அடுத்த அலகுமலையில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான சிலைகள் தயாரிப்புப் பணி, தீவிரமடைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா, ஆக., 25ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, இந்து முன்னணி சார்பில், கோவை, திருப்பூர், ஊட்டி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், பிரதிஷ்டை செய்வதற்கான சிலைகள், அலகுமலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில், சிவலிங்கத்தை துாக்கி வரும் பாகுபலி விநாயகர், ஆறு கரங்கள், ஐந்து தலை நாகத்தில் நாக விநாயகர், பால விநாயகர், லட்சுமி விநாயகர், கற்பக விருட்ச விநாயகர், கமல விநாயகர் என பல்வேறு புதிய வடிவங்கள், தயாரிப்பில் உள்ளன. இவை, மூன்றரை அடி முதல், 11 அடி வரை, வித்தியாசமான வடிவங்களில், உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், காகிதக்கூழ், பச்சை மாவு ஆகியவை கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. அதேபோல், வாட்டர் கலர் கொண்டு வர்ணம் பூசப்படுகிறது. இதுமட்டுமின்றி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோலம், விளையாட்டு, கலை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு என, கலாசார விழாக்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.