வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு தயாராகும் ஸ்ரீரங்கம்!
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசியில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம், அமைச்சர், அதிகாரிகள் குழு கொண்ட அலுவல் கூட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று நடந்தது. பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் வரும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 15ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவிழா ஏற்பாடு, பக்தர்கள் வசதிக்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த அரசு அலுவல் கூட்டம் ஸ்ரீரங்கம் நெரங்கநாதர் கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இந்து சமயம் அறநிலைத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, மாநகர போலீஸ் டி.சி.,க்கள் ஜெயபாண்டியன், ராமையா மற்றும் மாநகராட்சி, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இந்து சமயம் அறநிலைத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி பேசியதாவது: வைகுண்ட ஏகாதசிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் யாத்திரீக நிவாஸ் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான வரைபடம் முதல்வர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களை மாநகராட்சி, தனியார் பள்ளி, திருமணம் மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து மருத்துவமனை பணியாளர்கள் மருத்துவ சேவை வழங்குவர். நிரந்தர வாகனம் நிறுத்துமிடம், நிரந்தர சுழல் கண்காணிப்பு கேமிரா வசதி போன்றவை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ பேசுகையில், பக்தர்கள் தங்கும் இடங்கள் குறித்த விவரங்களை நன்கு விளம்பரம் செய்ய வேண்டும். வாகனம் நிறுத்துமிடங்களில் கழிவறை, கூடுதல் பஸ் வசதி செய்யப்படும், என்றார். மாநகராட்சி பொறியாளர் ராஜாமுகமது, ""துப்புரவு பணிக்காக 200 தற்காலிக பணியாளர் நியமிக்கப்படுவர். இரண்டு இடங்களில் தற்காலிகம், ஒரு நடமாடும் கழிவறை அமைக்கப்படும். ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி, தேவையான மின்வசதி செய்யப்படும், என்று பேசினார். தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட வணிக உதவி மேலாளர் மது பேசுகையில்,25ம் தேதியிலிருந்து ஜனவரி 7ம் தேதி வரை ஸ்ரீரங்கம் கோவிலில் இரண்டு சிறப்பு டிக்கெட் மையங்கள் செயல்படும். ஒன்று ரிசர்வேஷன், மற்றொன்று முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கும் கவுன்டர்களாகும். ஜனவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நிற்கும், என்றார். தமிழக அரசு போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல வணிக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, ""கடந்த ஆண்டு 40 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு பக்தர்கள் வசதிக்காக 50 பஸ்கள் இயக்கப்படும், என்றார். மாநகர சட்டம், ஒழுங்கு டி .சி., ஜெயபாண்டியன், ""பாதுகாப்பு பணிக்கு 2,460 போலீஸார், 9 டி.எஸ்.பி., ஆறு ஏ.டி. எஸ்.பி., ஈடுபடுத்தப்படுவர். முக்கிய பிரமுகர் பாதுகாப்பு, செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பது, போக்குவரத்து ஏற்பாடு உள்ளிட்ட அம்சங்கள் முக்கியத்துவம் அளி க்கப்படும், என்று பேசினார்.