சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா: 1,000 போலீசார் பாதுகாப்பு
சேலம்: சேலத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 700 சிலைகளுக்கு, 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை, மூன்று நாட்களுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளவும், ஆக.,27ல் விசர்ஜனம் செய்யவும், போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தலைமையில், துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, ராமகிருஷ்ணன் முன்னிலையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்ட, விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், கமிஷனர் சஞ்சய்குமார் பேசியதாவது: சேலத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த ஆண்டு இந்து அமைப்புகள் சார்பில், 90 சிலைகள், பொதுமக்கள் சார்பில், 600 சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. நடப்பாண்டும் அதே அளவு சிலைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சிலைகளை எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான கொட்டகை, கட்டடங்களில் வைக்க அனுமதிக்கக் கூடாது. சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும் இடங்களில், அதை வைப்பவர்களுடன் போலீசார் இணைந்து, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சேலம் மாநகர போலீஸ் சார்பில், 1,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சேலத்தில், எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் இருந்து மூக்கனேரிக்கும், குகை காளியம்மன் கோவிலில் இருந்து அம்மாபேட்டை, குமரகிரி ஏரிக்கும் விநாயகர் சிலைகள் விசர்ஜனத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட வேண்டும். நாளை ( இன்று) பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு, ஆக.,27 மாலை வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். விசர்ஜன ஊர்வலத்தில் சந்தேக நபர்கள், பிரச்னைக்குரிய நபர்கள் கண்காணிக்கப்படுவர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் எந்த பிரச்னையும் ஏற்படாமல், அமைதியான முறையில் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.