உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை

வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை

விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் களிமண்ணால் பிள்ளையார் வடிவத்தை செய்ய வேண்டும். முடியாதவர்கள் படத்தை  சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மேஜை அல்லது பலகையை சுத்தப்படுத்தி அதில் படம் அல்லது களிமண் உருவத்தை  கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு நோக்கி வைக்க வேண்டும் (அவரவர் வீட்டின் அமைப்பின்படி) தெற்கு நோக்கி வைக்கக்கூடாது. மஞ்சள்,  சந்தனம், குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும். தொப்புளில் நாணயம் வைத்து மூட வேண்டும். அதன்பின்  பிள்ளையாருக்கு மலர் மாலைகள், அருகம்புல், எருக்கம்பூ மாலை அணிவிக்க வேண்டும். சிலையின் முன் வாழை இலை போட்டு  அதன்மேல் நெல், பச்சரிசியை பரப்ப வேண்டும். மற்றொரு இலையில் கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, கரும்புத் துண்டு,  தேங்காய், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சிறு பாத்திரங்களில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், 21 மோதகம், 21  காரக்கொழுக்கட்டை, அப்பம், உளுந்து வடை, சுண்டல், சர்க்கரை கலந்த அவல், பொரி வைக்க வேண்டும்.

மணை அல்லது பாயில் குடும்பத்துடன் அமர்ந்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தைக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும். “

வக்ரதுண்ட மஹாகாய கோடிஸூர்ய ஸமப்ரப!
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா!!”


என்ற ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும். இதைச் சொல்ல முடியாதவர்கள், “ஒடிந்த தந்தமும், பெரிய உடம்பும் கொண்ட பலகோடி  சூரிய பிரகாசம் உடைய விநாயகரே!  எங்களுடைய எல்லா செயல்களும், எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் நிறைவேற அருள்  புரியவேண்டும்,” என்று கோரஸாக இணைந்து சொல்ல வேண்டும். அடுத்து அருகம்புல்லைக் கையில் வைத்துக்கொண்டு ஓம் கம்  கணபதயே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி அர்ச்சிக்க வேண்டும். மஞ்சள் சேர்த்த அரிசி (அட்சதை), வெள்ளெருக்கு,  செவ்வரளி, செம்பருத்தி, தாமரை ஆகியவற்றைத் துõவி அர்ச்சிக்கவும். பிறகு படைத்த பொருட்களை நைவேத்யம் செய்ய வேண்டும்.  பத்தி, சாம்பிராணி, கற்பூரம் காட்டி பூஜையை முடிக்க வேண்டும். விநாயகர் அகவல் மற்றும் பாடல்களைப் பாடலாம். வைவேத்ய  பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு அன்னதானம், ஆடைதானம் செய்ய வேண்டும். களிமண் பிள்ளையார்  வைத்து பூஜை செய்தவர்கள் மூன்றாம் நாளில் ஆறு, குளங்களில் கரைத்து விட வேண்டும்.

பூஜை செய்ய நல்ல நேரம்:
காலை 6.00 - 7.00 மணி, 9.00 - 10.30மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !