விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் யானை மண்டியிட்டு வழிபாடு
திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும், 2,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு, சம்மந்த விநாயகர் சன்னதியில் மண்டியிட்டு வழிபட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,2,000 சிலைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு, விழா கொண்டாடப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகரின் அறுபடை வீடுகளில், முதலாம் வீடான அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுர செல்வ கணபதிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது. கோவில் யானை ருக்கு சம்மந்த விநாயகர் சன்னதியில் மண்டியிட்டு வழிபட்டது. மேலும் இரட்டை பிள்ளையார் கோவிலில் சந்தன அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். செங்கம் நகரில், 25 இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு, அந்த சிலைகள் வைக்க, நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 25 சிலைகளுடன் பெருமாள் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வலம், பஜார் வீதியை கடந்து செல்ல, ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், , இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் பகல், 1:30 மணிக்கு திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர். செங்கம் போலீசார் மற்றும் தாசில்தார் உதயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து மீண்டும் மதியம், 2:30 மணிக்கு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தனர்.