தங்கம், வெள்ளி, ராஜ அலங்காரங்களில் ஜொலித்த விநாயகர்
சேலம்: சேலம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேலம், தேரடி வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பால், நெய், தயிர் உள்பட, 54 வகை திரவியம் மூலம், அபி?ஷகம் செய்யப்பட்டது. காலை, 9:00 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமிக்கு அருகம்புல் மாலை, எருக்கம் பூ மாலை, கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். சேலம், ஸ்வர்ணபுரியில் உள்ள ஸ்வர்ண விநாயகர் கோவிலில், காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, தங்க கவச அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஐந்து ரோடு அருகே, தட்டான்குட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு, தங்க கவச அலங்காரம் செய்து, திருநங்கையர் கொண்டாடினர். செவ்வாய்ப்பேட்டை, வாசவி மண்டபத்தில், 16 அடி உயரத்தில், ராஜதர்பார் அலங்காரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அப்புசெட்டி தெருவில், கைலாய கடன் தீர்க்கும் கணபதி அலங்காரத்தில் சிலை வைக்கப்பட்டிருந்தது.
மல்லூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், தாசநாயகன்பட்டி, கெஜ்ஜல்நாயகன்பட்டி, நிலவாரப்பட்டி, நத்தமேடு, மல்லூர் உள்ளிட்ட, 80 இடங்களில், நண்பர்கள் குழு சார்பில், விநாயகர் சிலை வைத்து, பூஜை செய்தனர். பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், குள்ளப்பநாயக்கனூர், திப்பம்பட்டி, குரால்நத்தம், காந்திநகர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட, 29 இடங்களில் வைக்கப்பட்ட சிலைக்கு, பூஜை செய்து, பொதுமக்கள் வழிபட்டனர். இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே, சரபங்கா ஆற்றின் கரையோரம் உள்ள விநாயகர், சில்லரை காசு மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு, பூஜை நடந்தது. இடைப்பாடி அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே, பிரளயம் காத்த விநாயகரை, ஏராளமானோர் வழிபட்டனர். சங்ககிரி, தில்லை விநாயகர் கோவிலில், மஹா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. சங்ககிரியில், 52, தேவூரில், 31, மகுடஞ்சாவடியில், 60 சிலைகள், நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவிலில், உலக நன்மைக்காக வேள்வி பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெண்ணெய் காப்பு, சந்தன காப்பு அலங்காரத்தில், விநாயகர் அருள்பாலித்தார். வாழப்பாடி, எழில்நகர் பிங்கள விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேட்டூர், குள்ளவீரப்பன்பட்டியில், அரச மரம், வேப்பமரம் ஒன்றாக உள்ளது. அதன் அடிவாரம், சிறப்பு அலங்காரத்தில் இருந்த விநாயகரை, பக்தர்கள் வழிபட்டனர். அப்போது, அரச மரத்தில் தும்பிக்கையுடன் விநாயகர் இருப்பது போன்ற உருவம் தெரிந்தது. அதில், சந்தனம் பூசி பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஜலகண்டாபுரம் வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில், பார்வதி சிவன், விநாயகருக்கு ஞானப்பழம் வழங்குவது; கோபித்து, முருகபெருமான் செல்வது போன்று, சிலைகள் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.