வேளாங்கண்ணி திருவிழா பாதயாத்திரை
வடமதுரை, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல், தேனி மாவட்டங்களை பக்தர்கள் வடமதுரை வழியே நடைபயணம் சென்ற வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணியில் ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழா செப்.8 வரை நடக்க உள்ளது. இத்திருவிழாவிற்காக திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சிறு, சிறு குழுக்களாக வேளாங்கண்ணி நோக்கி நடைபயணம் சென்ற வண்ணம் உள்ளனர். சாணார்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பாடி, சித்துார் வழியே வடமதுரையிலும், தேனி மாவட்ட பக்தர்கள் வத்தலக்குண்டு, செம்பட்டி, திண்டுக்கல் வழியேயும் திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் சேர்ந்து செல்கின்றனர். இவர்களுள் பலர் கொடி, சிலுவையை ஏந்தியும், சப்பரம், தேர், சைக்கிள் ரிக் ஷா போன்றவற்றில் மாதா சிலையுடன் பக்தி பாடல்களை ஒலிபரப்பியவாறும் செல்கின்றனர். காலையில் வெயில் தாக்கம் கடுமையாகும் வரையும், பின்னர் மாலை துவங்கி நள்ளிரவு வரையும் பயணத்தை தொடர்கின்றனர்.