முந்திரி, திராட்சை, பாதாம் பொரி உருண்டை விநாயகர்
ஆர்.கே.பேட்டை : விநாயகருக்கு பிடித்தமான தின்பண்டம் மற்றும் பழங்களை கொண்டு, புதுமையாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, ஏராளமான பக்தர்கள் வியப்புடன் தரிசனம் செய்தனர். பிரமாண்டமான, ’ரெடிமேட்’விநாயகர் சிலைகள் விஸ்வரூபம் காட்டிய நிலையில், அம்மையார்குப்பம் இளைஞர்கள் தங்களின் சொந்த முயற்சியில், கற்பனையில் உருவெடுத்த வித்தியாசமான விநாயகர் சிலைகள், பக்தர்களை வெகுவாக கவர்ந்தன.
வரவேற்பு: விநாயகருக்கு பிடித்தமான பொரி உருண்டை, பாதாம் கொட்டைமற்றும் உலர் பழங்களை கொண்டு, உருவாக்கிய சிலைகளில், மிளிர்ந்த இளைஞர்கள் கைவண்ணம், கற்பனை திறன், பகுதிவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அம்மையார்குப்பம், ஜி.எஸ்.டி., நகர் பகுதி இளைஞர்கள் களிமண் கொண்டு உருவாக்கிய விநாயகர் சிலைக்கு, அரிசி மாவில் காப்பு, அதற்கு உலர் திராட்சை, முந்திரி, பாதாம் கொட்டை மற்றும் செர்ரி பழங்களை கொண்டு அலங்கரித்திருந்தனர். ஐந்து தலை நாக கிரீடத்துடன் அருள்பாலித்த விநாயகர், சிவலிங்கத்திற்கு, மூன்று நாட்களாக தொடர்ந்து பாலாபிஷேகம் செய்து வந்தனர். இதற்காக, பிரத்யேக இயந்திரம் சிலையின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பக்தர்களின் பார்வைக்கு, விநாயகர் அபிஷேகம் செய்யும் காட்சி மட்டுமே தத்ரூபமாக தெரிய வந்தது. இதே போல், ஜி.எஸ்.டி.நகரின் வடக்கு பகுதியில், பொரி உருண்டை மற்றும் பழங்களை கொண்டு அமைக்கப்பட்ட விநாயகர் சிலையும் பகுதிவாசிகளை வெகுவாக கவர்ந்தது.
ஊர்வலம்: களிமண் கொண்டு வந்தது முதல், சிலை அமைத்து அரிசி மாவில் காப்பு போட்டது, பழங்களில் அலங்காரம் செய்தது என, மொத்தம் 48 மணி நேரம் செலவிட்டு, இளைஞர்கள் தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர். நேற்று முன்தினம் மாலை, 108 குத்து விளக்கு பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலை, விநாயகர் சிலைகள், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.