சிலைகள் ஊர்வலம்: குதூகலித்த பக்தர்கள்
சேலம்: சேலத்தில், தாரை, தப்பட்டை முழங்க, விநாயகர் சிலைகள் ஊர்வலம், குதூகலமாக நடந்தது. நாடு முழுவதும், சதுர்த்தி விழா, கடந்த 25ல், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்று வழிபாடு செய்ய வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று, ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. சேலம், குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து, மாலை, 4:25 மணிக்கு, ஊர்வலம் புறப்பட்டது. நான்கு வேன்களில், நான்கு பெரிய சிலைகள், 34 சிறிய சிலைகளுடன், தாரை, தப்பட்டை முழங்க புறப்பட்ட ஊர்வலம், மூங்கப்பாடி தெரு, திருச்சி பிரதான சாலை, காந்தி சிலை, கன்னிகா பரமேஸ்வரி கோவில், சின்னக்கடை வீதி, பெரியக்கடை வீதி, பட்டை கோவில், சித்தேஸ்வரா கோவில், அம்மாபேட்டை பிரதான சாலை, புகையிலை மண்டி தெரு வழியாக சென்று, குமரகிரி ஏரியில், மாலை, 6:30 மணிக்கு கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில், மக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
* சேலம், மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், இரும்பாலை பகுதிகளில் இருந்து, 335 சிலைகள், பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில், 409 சிலைகள், கல்வடங்கம், பூலாம்பட்டி காவிரி ஆற்று பகுதிகளில் கரைக்கப்பட்டன.
* வாழப்பாடி, பேளூர் பகுதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 100க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, புழுதிக்குட்டையில் உள்ள ஆணைமடுவு அணை, வெள்ளாளகுண்டம் ஆணைமடுவு அணைகளில் கரைக்கப்பட்டன. மேலும், ஏற்காடு ஏரியில், 25க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.