திருப்பூர் கோவில்களில் கும்பாபிஷேக விழா
திருப்பூர் : திருப்பூர் அருகேயுள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊரா ட்சி, அப்பியாபாளையத்தில் அமைந்துள்ள விநாயகர், ஸ்ரீ சப்த கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன், முனியப்ப சுவாமிகள், ஸ்ரீ ஆகாச கருப்பராயன் சுவாமிகள், மஹா கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி விழா குழுவினர் மற்றும் அப்பியாபாளையம் பொதுமக்கள் செய்திருந்தனர்.
ஆட்டையாம்பாளையம்: இடுவாய், ஆட்டையாம்பாளையம் சித்திவிநா யகர், செல்லாண்டியம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 25ல் துவங்கியது. நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜை, மூன்றாம் கால யாக பூஜை நிறைவு பெற்ற பின் தீபாராதனை நடந்தது; இரவு, 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. நேற்று காலை, 3:00 மணிக்கு, ஐந்தாம் கால யாக வேள்வி, காயத்திரி ஹோமம், கனிவர்க்க ஹோமம், நாடிசந்தான பூஜைகள் நடந்தன. காலை, 05:00 மணிக்கு, தர்மபுரி வேதமாதா காயத்ரி குருபீட பிரம்ம ஸ்ரீ நரசிம்ம சாமி தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இன்று முதல் மண்டலாபிஷேக பூஜை நடக்கிறது.
கருவம்பாளையம்: திருப்பூர், மங்கலம் ரோடு, கருவம்பாளையத்தில் மாகாளியம்மன், சுகவனேஷ்வரர், மகா கணபதி முருகர், நவகிரஹங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த, 25ம் தேதி காலை, 8:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. மாலையில், வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜைகளுடன் முதல்கால யாகபூஜையும் நடந்தது. கடந்த, 26ம் தேதி காலை மற்றும் மாலையில், இரண்டு, மூன்றாம் காலயாக பூஜையும், நேற்று காலை, 6:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, மாகாளியம்மன் கோவில் விமானம், மூலாலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.