வழிபாட்டை ஒழுங்குபடுத்தியவர் ராமானுஜர்
சென்னை : ’வைணவ வழிபாட்டை, ஒழுங்குபடுத்தியவர் ராமானுஜர்’ என, தாமல் ராமகிருஷ்ணன் பேசினார். தியாசபிகல் சொசைட்டி மைலாப்பூர் லாட்ஜ், சென்னை புரோபஸ் சங்கம் இணைந்து, ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை, சென்னை, தி.நகர், கர்நாடக சங்கத்தில், நேற்று நடத்தின.அதில், தாமல் ராமகிருஷ்ணன், ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை, உபன்யாசம் செய்தார்.
அவர் பேசியதாவது: வரதராஜ பெருமாளுக்கு, திருஆலவட்டம் வீசும் சிறப்பு பெற்ற திருக்கச்சி நம்பிகள், அவருடன் பேசும் திறன் படைத்தவர். அவரை குருவாக கொண்டாலும், தன் வீட்டிற்கே வரவழைத்து, உணவு படைத்தவர் ராமானுஜர். ராமானுஜரின் தத்துவங்களை கேட்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட அனைத்து மூல மூர்த்திகளும் ஆவலாக இருந்தனர்.ராமானுஜரை தன்பால் ஈர்க்க, வரதராஜ பெருமாளுக்கும், தாயாருக்கும் தம் அரையர் சேவையை, ரங்கநாதர் நிகழ்த்தினார். அதில் கரைந்த வரதராஜரிடம், ராமானுஜரை பரிசாக பெற்றார்.
உற்சவ மூர்த்தியான நம்பெருமாளையே, காவிரிக்கரைக்கு அனுப்பி பூர்ண கும்ப மரியாதையுடன், ராமானுஜரை, ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்து, அனைத்து மோட்சங்களையும் வழங்கும், உபயவிபூதி அளித்தார்.அதற்கு உபகாரமாக, தன் கோவிலில் நடக்கும் வழிபாட்டை ஒழுங்குபடுத்தும் படி கேட்டுக்கொண்டார். அவ்வாறே அவரும் செய்தார். அதுவே, வைணவ வழிபாடாக மாறியது.இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தர்ஷினி நாடக குழுவினர் நடத்திய, ராமானுஜ தரிசனம் நாடகம் நடந்தது. தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், ராமானுஜம், ராமசாமி, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், பேராசிரியர் சடகோபன் உள்ளிட்டோர், ராமானுஜர் தத்துவங்களை விவரித்தனர்.