உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலை ஊர்வலம்; திருப்பூரில் கோலாகலம்

விநாயகர் சிலை ஊர்வலம்; திருப்பூரில் கோலாகலம்

திருப்பூர் : இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது. ரோடுகளில், எங்கு பார்த்தாலும் விநாயகர் சிலைகளே தென்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், திருப்பூர் மாநகர பகுதிகளில், 1,654 சிலைகள், கடந்த, 25ல் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து, நான்கு நாட்களும், தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கலாச்சார விளையாட்டு போட்டிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று, மேளதாளம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு மற்றும் செல்லம் நகர் பகுதிகளில் இருந்து, ஊர்வலம் துவங்கியது. பல்வேறு பகுதியில் நடந்த ஊர்வலத்துக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் கிஷோர் குமார், தாமு வெங்கடேஸ்வரன், மாநில அமைப்பாளர் பக்தன், சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சீருடை அணிவகுப்பு: திருப்பூர் வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 680 சிலைகள், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சங்கமித்தன. அங்கிருந்து ஊர்வலமாக ஆலாங் காடு எடுத்துச் செல்லப்பட் டது. புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில செயலாளர் செந்தில் பாலசுப்ரமணியம், இந்து முன் னணி மாநில செயலாளர் கிஷோர் குமார், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். வெண்ணிற சீருடை அணிந்த, 31 இந்து முன்னணி தொண்டர்கள், இந்து முன்னணி கொடியை ஏந்தி, அணிவகுத்து சென்றனர். பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், குதிரை மற்றும் மாடு ஆட்டம் ஆடியபடி, கலைஞர்கள் சென்றனர். பஞ்சவர்ண குடையின் கீழ், இரண்டு விநாயகர் சிலைகளை வைத்து, பழவகைகள், பதார்த்தங்கள் படைத்தனர்.

நிஜமான யானை போல், பொம்மை யானை பிளிரிய சத்தத்துடன் சென்றது. சுமார், 10 அடி உயரத்தில் அமர்ந்த ஆதிசிவன் சிலை, பொதுமக்களை பரவசப்படுத்தியது. சிலையின் முன், குளக்கரையில் சாதுக்கள் தவம் இயற்றியபடி அமர்ந்திருந்தனர். சிவனின் கண்கள் மனிதர்களை போல் மெதுவாக சிமிட்டிய படி இருந்தது. அவ்வப்போது, சிவனின் சடைமுடி திறந்து, அதிலிருந்து வெளியே வந்த கங்கா தேவி, சிறிய நீரூற்று போல் தண்ணீரை தெளித்து மறைந்தது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து, மகிஷாசுரவர்த்தினி சிலை ஊர்வலமாக வந்தது. புது பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம், 60 அடி ரோடு, எம்.எஸ்., நகர், திருநீலகண்டபுரம், கொங்கு மெயின் ரோடு, லட்சுமி நகர் வழியாக, மில்லர் பஸ் ஸ்டாப் அருகே மீண்டும் பி.என்., ரோட்டை வந்தடைந்தது. ரயில்வே மேம்பாலம், நேருநகர் வழியாக ஆலாங்காட்டை சென்றடைந்தது.

தெற்கு பகுதி: திருப்பூர் தெற்கு பகுதி விசர்ஜன ஊர்வலம், தாராபுரம் ரோடு, வெள்ளியங்காடு பிரிவு அருகே, தெற்கு பகுதி ஊர்வலம் துவங்கியது. பா.ஜ., கோட்ட செயலாளர் மணி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன், செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில், 380 சிலைகள் பங்கேற்றன. கரட்டாங்காடு, பெரிச்சிபாளையம், திரு.வி.க., நகர், வெள்ளியங்காடு, தென்னம்பாளையம் வழியாக, நிறைவு விழா பொதுக் கூட்டம் நடக்கும், ஆலங்காடு வந்து சேர்ந்தது.

தையம் கலைஞர்கள்: திருப்பூர் மாநகர மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பகுதிவாரியாக வாகனங்களில் ஏற்றி, செல்லம் நகர் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அணிவகுத்த வாகனங்கள் வரிசையாக ஊர்வலமாகப் புறப்பட்டன. மாவட்ட இந்து முன்னணி தலைவர் அண்ணாதுரை, முன்னாள் கவுன்சிலர் திருப்பதி ஆகியோர் தீபாராதனை காட்டி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். கேரள செண்டை, டிரம்ஸ் ஆகிய வாத்தியங்கள் இசைத்தபடி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் முன்னதாக வெள்ளை சீருடை அணிந்த தொண்டர்கள் இந்து முன்னணி கொடி ஏந்தியபடி அணிவகுத்து சென்றனர். ஏராளமான பெண்கள் முளைப் பாலிகை எடுத்து வந்தனர். பல்வேறு கடவுள் உருவம் தரித்த பக்தர்கள் மற்றும் கேரள தையம் கலைஞர்கள் ஊர்வலத்தில் வந்தனர். செல்லம் நகர் பிரிவில் துவங்கிய ஊர்வலத்தில் விசர்ஜனம் செய்வதற்காக விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக சென்றது. செல்லம்நகர், கே.வி.ஆர். நகர், ஏ.பி.டி. ரோடு, மங்கலம் ரோடு வழியாக ஆலங்காட்டில் பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு இந்த வாகனங்கள் வந்து சேர்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !