உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் அடுத்த உற்சவம் பொதட்டூரில் 6 நாள் கொண்டாட்டம்

அம்மன் கோவிலில் அடுத்த உற்சவம் பொதட்டூரில் 6 நாள் கொண்டாட்டம்

ஆர்.கே.பேட்டை : ஆடி கிருத்திகை, விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து, அடுத்து அம்மன் கோவில்களில், ஜாத்திரை விழா நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள், தற்போது நடந்து வருகின்றன. பொதட்டூர்பேட்டையில், ஆறு நாட்கள் உற்சவமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்களின் துவக்கமாக, ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு உற்சவங்களை தொடர்ந்து, ஆடி கிருத்திகையில் முருகர் கோவில்களில் காவடி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து, சுவாமியை வழிபட்டனர். முருகப் பெருமானுக்கு நடந்த திருவிழாவை தொடர்ந்து, ஆவணி சதுர்த்தி திதியில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடப்பட்டது. வீதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று முன்தினம், நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

ஜாத்திரை விழா: முருகர், விநாயகருக்கு நடந்த உற்சவங்களை தொடர்ந்து, இந்த ஆவணி மாதத்தில், ஜாத்திரை விழா நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், ஆவணி மூன்று மற்றும் நான்காம் வாரங்களில், அம்மன் ஜாத்திரை விழா கொண்டாடப்படுவது வழக்கம். பொதட்டூர்பேட்டையில், நான்காம் வாரம், ஜாத்திரை விழா, வரும் செப்., 10ம் தேதி, ஆராட்டம்மன் பொங்கல் வழிபாட்டுடன் துவங்குகிறது. அம்மனுக்கு நேர்த்திக் கடனாக ஆடுகளை பலியிடும் வழக்கம் உள்ளதால், அன்று முதல், பொதட்டூர்பேட்டையில், சிறப்பு ஆட்டு சந்தையும் நடத்தப்பட உள்ளது. ஜாத்திரையை ஒட்டி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக, சந்தைக்கு கொண்டு வரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 11ம் தேதி அதிகாலை, ஜாத்திரை சாட்டுதல் செய்யப்படுகிறது.

ஐதீகம்: சாட்டு நடந்த பின், கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இரவு வெளியூர்களின் தங்கக்கூடாது, வெளியூர் சென்றாலும், இரவு கட்டாயம் வீடு திரும்பி விடவேண்டும் என்ற ஐதீகம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை, பொன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளுகிறார். புதன்கிழமை அதிகாலை, பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டத்துடன் மாரியம்மன் வீதியுலா நடைபெறும். அதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, நடுத்தெரு கும்பம், அம்மனுக்கு படைக்கப்படும். இரவு, 8:00 மணிக்கு, பொலி சாட்டு நடத்தப்படும். வெள்ளிக்கிழமை, மாலை 3:30 மணிக்கு, பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக, மாறுவேடம் அணிந்து, ரதங்களில் ஊர்வலம் வர உள்ளனர். தெருவுக்கு ஒரு ரதம் என, ஏராளமான ரதங்களின் பவனியை பார்வையிட, கிராமத்தினர், பஜார் பகுதியில் திரண்டு நிற்பதும் வாடிக்கை. அன்று இரவு, பக்தி இசை கச்சேரியும், அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளன. ஆறு நாட்கள் நடைபெற உள்ள அம்மன் ஜாத்திரைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !