உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் காவிரி மஹா புஷ்கரம்: பக்தர்கள் புனித நீராடினர்

காரைக்காலில் காவிரி மஹா புஷ்கரம்: பக்தர்கள் புனித நீராடினர்

காரைக்கால்: காரைக்காலில் நேற்று துவங்கிய, காவிரி மஹா புஷ்கரம் விழாவில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். காரைக்கால் மாவட்டத்தில், புண்ணிய நதியான காவிரியின் ஏழு கிளைகளான நண்டலாறு, நாட்டாறு, வாஞ்சியாறு, நுாலாறு, அரசலாறு, திருமலைராஜனாறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகள் பாய்ந்து, வங்கக் கடலை அடைகின்றன. ஸப்த சிந்து, ஸப்த கோதாவரி என்பன போன்று, இந்த ஏழு நதிகளும் ஸப்த காவிரி என போற்றப்படுகின்றன.

காசிக்கு அடுத்து, மிகவும் பவித்ரமான தர்ப்பை புல் ஸ்தல விருட்சமாக திகழும் திருநள்ளார், வாஞ்சியூர் ஆகிய இரு தலங்களும் காரைக்காலில் உள்ளது சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைக்காலில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், காவிரி மஹா புஷ்கரம்  விழா, திருநள்ளார் அகலங்கண்ணு பகுதியில் நேற்று துவங்கியது. இவ் விழா,  வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்.எல்.ஏ., கீதா ஆனந்தன்,  கலெக்டர் கேசவன், துணை ஆட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். விழாவை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.  அதையடுத்து, ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். சிவகாமி அம்பாள், வைத்தியநாதர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

காவிரி மஹா புஷ்கரம் என்பது, குரு பகவான், கன்னி ராசியில்  இருந்து, காவிரி நதிக்கு உரிய துலாம் ராசிக்கு மாறுகின்ற குரு பெயர்ச்சி  காலத்தில் கொண்டாடப்படும் விழாவாகும். புஷ்கர விழாவின்போது, காவிரியில்  நீராடுவதால் பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள்  நீங்கி, பஞ்சம் அகன்று, உலகம் சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். காவிரி மகா புஷ்கரம், 144 ஆண்டுகளுக்குப் பின் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !