காவிரி மகா புஷ்கரம் விழா : குவிந்த பக்தர்கள்
மயிலாடுதுறை: காவிரி மகா புஷ்கரம் விழாவின் இரண்டாம் நாளான நேற்று, மயிலாடுதுறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், காவிரி மகா புஷ்கரம் விழா, நேற்று முன்தினம் துவங்கியது. 24ம் தேதி வரை, 12 நாட்களுக்கு புஷ்கரம் விழா நடக்கிறது. இரண்டாவது நாளான நேற்று, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள், தங்களது மூதாதையருக்கு திதி கொடுத்து, காவிரியில் புனித நீராடினர். காவிரி தென் கரையில்,பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி தாயையும், வடகரையில் எழுந்தருளியுள்ள சுவாமி, அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த சுவாமி சர்வேஸ்வர் தலைமையில், அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த குழுவினர், காவிரி துலாக்கட்டத்திற்கு நேற்று வந்து, காவிரியை வழிபட்டனர். நேற்று மாலை நிலவரப்படி, 1.60 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். புஷ்கரம் விழாவையொட்டி, காவிரி வடக்கு கரையில், 12 நாட்களுக்கு சிறப்பு ஹோமங்கள் நடக்கின்றன. தோஷங்கள் நீங்கும் நவக்கிரக ஹோமம் நேற்று நடத்தப்பட்டது. காவிரி துலாக்கட்டத்தை ஆய்வு செய்த கலெக்டர் சுரேஷ்குமார் கூறும்போது, மகா புஷ்கரம் விழாவையொட்டி, மக்கள் சிரமமின்றி நீராடி செல்ல, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புஷ்கரத்தில் பழைய தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியேற்றப்படுவதுடன், இரவில் புதிய தண்ணீர் மாற்றப்படுகிறது, என்றார்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில், நேற்று இரண்டாம் நாள் புஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது. வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் நீராடினர்.அம்மா மண்டபம் சாலையில், காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டி சார்பில், வேத விற்பன்னர்களை கொண்டு மழை வேண்டியும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவும், 23ம் தேதி வரை பல்வேறு யாகங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நன்மக்கள் பேறு வேண்டி, நேற்று, சந்தான கோபால கிருஷ்ண யாகம் நடத்தப்பட்டது.