தினமலர் செய்தி எதிரொலி: பழநி பாதயாத்திரை பக்தர்கள் அவதிக்கு விடிவு
வடமதுரை: பழநி பாதயாத்திரை பக்தர்களை ‘படுத்திய’ அய்யலுார்- எரியோடு ரோடு பிரச்னை முடிவுக்கு வந்தது. தைப்பூசம், பங்குனி உத்திர விழா காலங்களில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை வருகின்றனர். நான்கு வழிச்சாலையில் நடந்து வரும் இவர்கள் அய்யலுார்- எரியோடு- வடமதுரை- ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு பயணத்தை தொடர்கின்றனர். இவ்வழியில் அய்யலுார்- எரியோடு இடையே ஒத்தப்பட்டி- குரும்பபட்டி பகுதியில் 4 கி.மீ., துாரம் மட்டுமே ஒருவழி ரோடாக இருந்தது. மற்ற இடங்களில் 5.5 மீட்டர் அகலம் கொண்ட ரோடாக பல ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றப்பட்டது.
கனரக வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில், ஒற்றை வழித்தடமான 4 கி.மீ., துாரத்திற்குள் அடிக்கடி விபத்துகள் நடந்தன. பாதயாத்திரை சீசனில் நேரங்களில் விபத்து அபாயம் அதிகமாக இருந்தது. இதனால் பக்தர்கள் ஒருவித அச்சத்துடனே இதில் நடந்து செல்வர். பக்தர்களின் அவதி குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்திகள் வெளியானது. இதன் எதிரொலியாக ரூ.1.90 கோடி செலவில் 3 பாலங்களுடன் 4 கி.மீ., துார பாதை, 5.5 மீட்டர் அகலமானதாக மாற்றப்பட்டுள்ளது.