பவானியில் மகா புஷ்கர விழா : காவிரியில் பிரமாண்ட மேடை
பவானி: பவானியில், மகா புஷ்கர விழாவுக்கு, காவிரி ஆற்றில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையிலும், பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை காவிரி ஆற்றில், வரும், ௨௦ முதல், ௨௪ வரை மகா புஷ்கர விழா நடக்கிறது.இதற்காக காவிரி ஆற்றில், 10 அடி அகலம், 100 அடி நீளத்தில், பிரமாண்ட மேடை அமைக்கும் பணி, இரவு, பகலாக நடக்கிறது.புஷ்கர விழாவுக்காக, மேட்டூர் அணையில் இருந்து, விநாடிக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றின் நடுவில், மேடை அமைக்கும் பணி நடக்கிறது. பரிசலில் சென்று, மேடை அமைக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஐந்து நாட்கள் நடக்கும், புஷ்கர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேடை மீது, அமர்ந்துதான் யாகம், ஹோமம், வேள்வி வழிபாடு, காவிரி அன்னைக்கு தினசரி ஆரத்தி வழிபாடு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.