உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதர்களின் முதல் இசைக்கருவி ’பறை’ வரலாற்று நினைவு சின்னமாகிறது

மனிதர்களின் முதல் இசைக்கருவி ’பறை’ வரலாற்று நினைவு சின்னமாகிறது

ஆதிமனிதர்கள் உருவாக்கி, வரலாற்றில் பலவகையில் பயன்படுத்திய ’பறைகள்’ தற்போது, சில இடங்களில் மட்டுமே நினைவாக காணப்படுகிறது.

கற்காலத்தில் ஒரு இரவு: இருள் சூழ்ந்த காட்டின் நடுவே, சிலர் திசை தெரியாமல் திணறிக்கொண்டிருந்தனர். அப்போது, வெகுதொலைவில் தும்...தும்...தும்... என சத்தம் தொடர்ந்து கேட்கத்தொடங்கியது. அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி. சத்தம் வந்த இலக்கை குறி வைத்து ஓடத்தொடங்கினர். மூன்று நாழிகை (முக்கால்மணி நேரம்) ஓட்டத்துக்கு பின், தங்கள் வசித்த குகைப்பகுதிக்கு வந்தனர். அங்கு உயர்ந்த பாறையின் மீதிருந்த பெரிய ’பறை’ யை, நீண்ட எலும்புகளால் தொடர்ந்து அடித்தபடி நின்ற, தங்கள் குடும்பத்திரை ஓடி சென்று அணைத்துக்கொண்டதோடு, விளக்குகள் கண்டறிப்படாத காலத்தில், சத்தம் மூலம் வழிகாட்டி, தங்களை காப்பாற்றிய பறையை அனைவரும் வணங்கினர்.

பறையின் கண்டுபிடிப்பு: வேட்டை மட்டுமே வாழ்வாக கொண்டு மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், மீதமான விலங்குகளின் தோல்கள், குளிர்கால ஆடைகளாக பயன்படுத்தினர். நாளடைவில், இந்த கெட்டியான தோலையும், மரத்துண்டுகளையும் இணைத்து ஒருவித சத்தம் ஏற்படுத்தும் பொருளை உருவாக்கினார்கள். அளவில் பெரிதாக இருந்த இதற்கு ’பறை’ என பெயரிட்டு அழைத்தனர். இந்த சத்தம் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இதை எந்த வகையில் பயன்படுத்தலாம் என யோசித்தபோது, கிடைத்த ஒரு ’ஐடியா’ தான் ’பறை அறிவிப்பு’ஆகும்.

பறை அறிவிப்பு: நுாறு குடும்பங்கள் வரை, ஒரு இடத்தில் சேர்ந்து குழுவாக வாழ தொடங்கிய பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பகலில் மட்டுமே மனிதர்கள் பயமின்றி இருந்தனர். இரவு தொடங்கிய நேரத்தில் எந்தவித வெளிச்சமும் இல்லாமல் தவித்தனர். இந்த காலகட்டத்தில் வேட்டைக்கு சென்றவர்கள், இரவு தொடங்கி விட்டால் திசை தெரியாமல், பல விதமான ஆபத்துக்களில் சிக்கி இறந்து விடும் அவலம் இருந்தது. இதனால் குறித்த நேரத்தில் திரும்பவில்லையென்றால், பறையை, தொடர்ந்து அடித்து சத்தம் எழுப்பி வேட்டைக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு திசையும், இருப்பிடமும் காட்டினர். சரி வேட்டையில் கொழுத்த விலங்கு மாட்டிக்கொண்டது. பல நாட்கள் பசியாறலாம். இதற்கும் பறையை அடித்து சத்தம் எழுப்பி தங்களை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

வேட்டை: பறையின் சத்தத்தில் அதிர்வும், ஒலி வேகமும் அதிகம். இதனால், இந்த சத்தத்துக்கு காட்டுவிலங்குகள் பயப்பட்டன. இந்த விலங்குகள் தொல்லை அதிகரிக்கும் நாட்களில், தொடர்ந்துஇந்த பறையை அதிரவிட்டு விரட்டியதோடு, வேட்டைக்கும் பயன்படுத்த தொடங்கினர். இதற்கு பின், இதுபோன்ற குழுக்கள் பல்கிப்பெருகின. குறிப்பிட்டதொலைவுக்கு, ஒருமனிதக்கூட்டம் வாழத்தொடங்கியது. இவர்களுக்குள் பகையும் ஏற்பட்டதுண்டு. இப்படி வேற்று குழுவினர் தங்களை தாக்க வரும் போது, பறையை அடித்து தங்களை சார்ந்தவர்களுக்கு தெரிவித்ததோடு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொண்டனர்.

மடத்துக்குளமும் பறையும்:  இப்படி மனிதர்கள் வாழ்வில் இணைந்து பல வகையில் உதவிய பறை. முன்னோர்களின் முக்கிய கருவியாகும். நாகரிகம் வளர்ந்து கிராமவாழ்க்கை முறைக்கு மனிதர்கள் மாறிய நிலையிலும், முக்கிய அறிவிப்புகளுக்கும், விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தும் போதும், முக்கிய நபர்கள் வருகையை தெரிவிக்கவும், ஆடல் பாடல்களிலும் பறையை பயன்படுத்தினர். காலசக்கரம் வேகமாக சுழன்று, பல விதமாக இசைக்கருவிகள் பயன்பாட்டுக்கு வந்த பின், இந்த பறை ஓய்வுக்குச்சென்றது. மடத்துக்குளம் பகுதியிலுள்ளவர்கள் கூறுகையில், ’தற்போது, வெள்ளப்பெருக்கு மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு பயன்படுத்தும் ’துடும்பு அடித்தல்’ஆதிகால பறை அறிவிப்பிலிருந்து தோன்றியதாகும். தற்போது மடத்துக்குளத்தின் சிலஇடங்களில், நினைவாக உள்ளது’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !