உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறநிலைய கமிஷனரிடம் கோவில் பூசாரிகள் புகார்

அறநிலைய கமிஷனரிடம் கோவில் பூசாரிகள் புகார்

கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, அறநிலையத் துறை கமிஷனரிடம், கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தினர் புகார் அளித்தனர். அறநிலையத் துறை புதிய கமிஷனர், ஜெயாவை, தமிழக கோவில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் வாசு மற்றும் நிர்வாகிகள், நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது, கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, புகார் மனு அளித்தனர்.

அதன் விபரம்: பூசாரிகள் நல வாரியம் முடங்கி உள்ளது. அதை, புனரமைத்து பூசாரிகளின் வாழ்வாதாரத்தையும், நலனையும் காக்க வேண்டும். திருச்சி மாவட்டம், தொட்டியம் கிராமத்தில் உள்ள,லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு, தானமாக தரும் மாடுகளை, தனி நபர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். எனவே, இந்த புரட்டாசி மாதத்தில் வரும் மாடுகளையாவது முறைப்படி, பூசாரிகளுக்கு வழங்க வேண்டும். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம், அந்தந்த மடப்பள்ளிகளில் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், வெளியில் தயாரித்து கோவிலில் விற்கின்றனர். இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரியலுார் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில், பக்தர்களின் காணிக்கையை, முத்திரை இல்லா உண்டியலில் வசூலித்து சுருட்டுகின்றனர். அங்குள்ள தானிய கிடங்கில் நடக்கும், முறைகேடுகளையும் தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !