திருத்தணி அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா துவங்கியது
திருத்தணி : முருகன் துணை கோவில்களான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன், காமாட்சியம்மன் உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட கோவில்களில் நேற்று நவராத்திரி விழா துவங்கியது.
சிறப்பு பூஜை: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான காமாட்சி அம்மன் உடனுறை சோளீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா, நேற்று மாலை துவங்கியது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. வரும், 30ம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறும். அதே போல், திருத்தணி அடுத்த மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று மாலை நவராத்திரி விழாவை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் துவங்கி வைத்தனர். முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைத்த கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
சொற்பொழிவு: தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டியம் நடந்தது. வரும், அக்.5ம் தேதி வரை, மொத்தம், 13 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுகிறது. இது தவிர, மூலவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன், வனதுர்க்கையம்மன், பழைய பஜார் தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்பட, 5க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில், நவராத்திரி விழா ஒட்டி கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இக்கோவில்களில் வரும், 30ம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.