சோலையப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3038 days ago
ஆட்டையாம்பட்டி: சோலையப்பன் கோவிலில், பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, திருமணிமுத்தாற்றங்கரையில் உள்ள சோலையப்பன், தூளியம்மன் கோவிலில், நேற்று, ஆண்டு திருவிழா நடந்தது. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவத்தை, பட்டாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், வளையல்களை காணிக்கையாக வழங்கினர். அவற்றை மாலையாக கோர்த்து, மூலவர் தூளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின், வளையல்களை, சுமங்கலிகளுக்கு பிரசாதமாக வழங்கினர். மாலை நடந்த திருவிளக்கு பூஜையில், திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.