சுவாமி மலையிலிருந்து தமிழ்த்தாய் பஞ்சலோக சிலை மலேசியா பயணம்!
பாபநாசம் : பாபநாசம் அருகே, சுவாமி மலையில் உருவாக்கப்பட்ட தமிழ்த்தாய் சிலை, மலேசியா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மலேசியா நாட்டில், கிவான் என்ற ஊரில், சிம்பங் லீமா என்ற தமிழ் கல்விக் கூடம், தமிழை கற்பித்து வருகிறது. இப்பள்ளியில் தமிழ்த்தாய் சிலை வைக்க எண்ணிய நிர்வாகிகள், தமிழ்த் தாய் படிமத்தை வடிவமைத்து தரும்படி, சுவாமிமலை குபேரன் சிற்பக்கூட ஸ்தபதி மோகன்ராஜ் பெருந்தச்சன் மற்றும் குபேரன் ஸ்தபதிகளை கேட்டுக் கொண்டனர். மலேசியா தமிழ் கல்விக் கூடம் கேட்டுக் கொண்டதன்படி, 30 கிலோ எடை கொண்ட ஒன்றரை அடி உயரமுள்ள, பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பஞ்சலோக தமிழ்த்தாய் வடிவமைக்கப்பட்டது. தமிழ்த் தாயின் இடது கையில், ஓலைச் சுவடியும், வலது கையில் செங்கோலும், இடுப்பு, மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் அணிகலன்களும், முத்தமிழை குறிக்கும் விதத்தில் மூன்று படிகளும் கொண்டு உருவாக்கப்பட்டது. பல்வேறு சிறப்பு மிக்க தமிழ்த் தாய் சிலை, கடந்த வாரம், மலேசிய நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதே போன்ற தமிழ்த்தாய் பஞ்சலோக சிலை, கடந்த சில மாதங்களுக்கு முன், அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில், தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.