எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நாளை மகா தீபம்!
பெரம்பலூர்: ""பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் டிச., 8ம் தேதி மகாசித்தர்கள் அறக்கட்டளை சார்பில் தீபத்திருவிழா கொண்டாடப்பட உள்ளது, என மகாசித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீராஜ்குமார் சுவாமிகள் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மகாசித்தர்கள் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டு 29ம் ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு டிச., 8ம் தேதி காலை 6 மணிக்கு மாத்தாஜி ரோஹிணி, ராதா ஆகியோர் தலைமையில் கோமாதா பூஜையும், காலை 7 மணிக்கு 210 மகாசித்தர்கள் யாகமும், பகல் 12 மணிக்கு தீபத்துக்கு ஏற்றப்படும் 210 மீட்டர் திரியை கோமாதா மீது வைத்து பூஜைசெய்து பிரம்மரிஷி மலை மீது எடுத்துச்செல்லப்படுகிறது.அன்று மாலை 4 மணிக்கு ருத்ரஜெபமும், 6 மணிக்கு வானவேடிக்கையுடன் மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது.இந்நிகழ்ச்சியில், இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த மகாசித்தர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் அரசியல், வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை மகாசித்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.கார்த்திகை தீபத்துக்குத் தேவையான நெய் உள்ளிட்ட பொருள்கள் காணிக்கையாக அளிக்க விரும்புவோர் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்திலுள்ள மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.