மாமல்லபுரம் கலைச்சின்னங்கள் தொடர் மழையால், ‘பளிச்’
மாமல்லபுரம்: தொடர் மழையால், மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களில் படிந்த மாசு அகன்று, பளிச்சிடுகின்றன. பல்லவ சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. கடற்கரை பின்னணியில் அமைந்த கற்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு உள்ளிட்டவை, சுற்றுலா பயணியரை கவர்கின்றன. காற்றில் பரவும் துாசு, வாகன புகையால் கலைச்சின்னங்கள் மாசடைந்து, பொலிவு இழந்தன. அவற்றின் பொலிவிற்காக, தொல்லியல் துறை, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, ரசாயன கலவை மூலம் துாய்மைப்படுத்துகிறது. சமீபத்தில், தொடர் விடுமுறையில், சுற்றுலா பயணியர் வாகனங்கள் குவிந்த நிலையில், அவற்றின் புகை, சிற்பங்களில் படிந்து மாசு அடைந்தன. இந்நிலையில், சிற்பங்களில் படிந்த மாசு, சமீபத்திய மழைநீரால் அகன்று, துாய்மையாக கழுவப்பட்டு, இயற்கை பாறை தன்மையுடன் பளிச்சிடுகின்றன. இதை, சுற்றுலா பயணியர் பரவசத்துடன் கண்டுகளிக்கின்றனர்.