உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று கார்த்திகை மகா தீபம்!

திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று கார்த்திகை மகா தீபம்!

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று மாலை 6.15 மணிக்கு, கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. எட்டாம்நாள் விழாவாக, நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு ஆறுகால் பீடத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். சுவாமியின் ரத்ன கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. ரமேஷ் சிவாச்சார்யாரிடம் நவரத்தின செங்கோல் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. செங்கோலுடன் சிவாச்சார்யார் ஆஸ்தான மண்டபத்தை வலம் வந்து, சுவாமியின் சிரசில் கிரீடம், கரங்களில் செங்கோல், சேவல் கொடியை சேர்ப்பித்தார். இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

இன்று மகா தீபம்: காலை 9 மணிக்கு 16கால் மண்டபம் அருகேயுள்ள சிறிய வைரத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி, ரத வீதிகளில் தேரேட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கோயிலுக்குள் பாலதீபம், 6.15 மணிக்கு மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இரவு 8 மணிக்கு சொக்கப்பனை தீப காட்சியும் நடக்கிறது.

மலைமேல் செல்ல தடை: மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, இன்று மலைமேல் பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். காசி விஸ்வநாதர், தர்ஹா, தீப தூண் ஆகியவற்றிற்கு துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து, ஆண்டுதோறும் தீபம் அன்று ஏராளமானனோர் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகி வருகின்றனர். இதனால் தீப தூணை சுற்றி மூங்கில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !