மண்ணை மலையாக்கி வழிபடும் கிராமத்தினர்!
மேலூர்: மலை உயர விவசாயம், வாழ்வு செழிக்கும் என்ற நம்பிக்கை கிராமத்தினருக்கு உள்ளதால், கார்த்திகை தீபத் திருநாளான நேற்று தங்கள் கைகளில் மண்ணை எடுத்து போட, அது மண் மலையாக மாறியது. மேலூர் நரசிங்கம்பட்டியில் உள்ளது பெருமாள் மலை. இதன் அடிவாரத்தில் ஆண்டிச்சாமி கோயிலில் கார்த்திகை திருநாள் கொண்டாடப்படும். இங்கு கண்மாய்கரையில் கைப்பிடி மண்ணை எடுத்து வந்து அருகில் போட்டு, அதனை சுற்றி வந்தால் நன்மை பயக்கும் என மக்கள் நம்புகின்றனர். இப்படி போடப்படும் கைப்பிடி மண்ணை கொண்டு உருவாகும் மலையின் அளவை கொண்டு விவசாயம், வாழ்வு வளம் பெறும் என்பது நம்பிக்கை. நேற்று 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இக் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு பெருமாள் மலையின் மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மேலவளவு கருப்பு கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இங்குள்ள மலையின் மீது ஏறி அங்கிருந்து கற்களை கீழ் நோக்கி வீசி, வழிபாடு நடத்தப்பட்டது. ஆட்டுக்குளம் பெருமாள் மலை உட்பட குன்றுகள் அனைத்திலும் தீபம் ஏற்றப்பட்டது.