சபரிமலை மண்டல பூஜைக்கு 30 சிறப்பு ரயில்கள்
திருவனந்தபுரம்: சபரிமலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல மகரவிளக்கு சீசனில் 30 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் கூறினார். சபரிமலையில் மண்டல கால சீசன் அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்க உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த வாரம் சபரிமலை சென்று அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டு வரும் வசதிகளை ஆய்வு செய்தார். திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சபரிமலை செல்லும் ரோடுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. சபரிமலையின் அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையமான செங்கன்னுார் ரயில் நிலையத்தில் செய்ய வேண்டிய வசதிகள் பற்றி ஆய்வு செய்ய கொடிகுந்நில் சுரேஷ் எம்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தென்னக ரயில்வேயின் திருவனந்த புரம் கோட்ட பொது மேலாளர் பிரகாஷ் புட்டானி, சீசன் முழுவதும் 30 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், கூடுதல் ரயில்கள் செங்கன்னுார் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.