மயிலம் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி
மயிலம் : மயிலம் முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவையொட்டி, இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கடந்த 20ம் தேதி துவங்கியது. இதையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. முற்பகல் 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால், சந்தன அபிஷேகம் நடக்கிறது. கந்த சஷ்டி விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக, இன்று இரவு 7:00 மணிக்கு, பாலசித்தர் சந்நிதியில் முருகன் வேல் வாங்கும் காட்சியும், இரவு 8:00 மணிக்கு சுப்பரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு உற்சவர், சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் கிரிவலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.