திருப்பூர் முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார விழா
திருப்பூர் :கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரனை வதம் செய்யும், சூரசம்ஹாரம், முருகன் கோவில்களில் இன்று நடைபெறவுள்ளது. முருகன் கோவில்களில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா, கடந்த, 20ம் தேதி துவங்கியது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள், காப்பு அணிந்து, சஷ்டி விரதத்தை துவக்கினர். கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, காங்கயம் அருகே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 20ல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அடிவாரத்தில் உள்ள நஞ்சுஸ்டேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் காலை, மாலை நேரங்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வருகிறது; திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் இன்று நடைபெறவுள்ளது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சக்தியிடம் வேல் வாங்குதல், சப்பரத்தில் எழுந்தருளல், பல வடிவங்கள் எடுத்து, சூரனை வதம் செய்யும் நிகழ்வு ஆகியன, இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. நாளை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.அதே போல், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், மங்கலம், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில் மற்றும் திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று, சூரசம்ஹாரம் நடக்கிறது.