உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா... கோலாகலம்!

சென்னை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா... கோலாகலம்!

சென்னை: கந்த சஷ்டி விழாவின் பிரதான நிகழ்வான சூரசம்ஹாரம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதி முருகன் கோவில்களில், இவ்விழா, பக்தர்களின், அரோகரா முழக்கத்தோடு சிறப்புடன் நடந்தது. தமிழ் கடவுள் என புகழப்படும், முருகப் பெருமான், சூரபத்மனை வதம் செய்து, அரவணைத்துக் கொண்ட நாளை, கந்த சஷ்டி என, சைவ சமயத்தவர்கள் கொண்டாடுவர். சஷ்டி என்றால், ஆறு எனப்படும். ஐப்பசி சுக்கிலபட்ச பிரதமை முதல் ஆறு நாட்கள், கந்த சஷ்டி காலம் ஆகும். இந்த ஆறு நாட்களும், விரத நாட்களாக கருதப்படுகிறது. கந்த சஷ்டியின் பிரதான நாளான நேற்று, ஆறுபடை வீடுகள் உட்பட, முருகன் கோவில்கள் அனைத்திலும், நேற்று சூர சம்ஹாரம் நடந்தது. சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில், இவ்விழா கோலாகமாக நடந்தது.

சூரபத்மன் வதம்:  சென்னை, பெசன்ட்நகர், கலாஷேத்ரா காலனியில் அமைந்துள்ளது, அறுபடை வீடு முருகன் கோவில். அங்கு இந்த ஆண்டிற்கான, கந்த சஷ்டி பெருவிழா, அக்., 20ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, 7:30 மணிக்கு, அனைத்து சன்னதிகளிலும் விசேஷ அபிஷேக, அலங்காரம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, வேல் மாறல் பாராயணம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, முருகப் பெருமான் அலங்காரத்துடன், அம்பாளிடம் வேல் பெற்று, வதத்திற்கு புறப்பட்டார். 4:30 மணிக்கு, சூரசம்ஹார விழா துவங்கியது. முருகப் பெருமான் படை சூழ, யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபத்தில் வந்த சூரபத்மனை, வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. பின், மாமரமாக மாறிய சூரன், அதை பிளந்தபோது, சேவல், மயிலாக மாறிய காட்சி நடந்தது. இந்த வைபவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகப் பெருமானை தரிசித்தனர். அதை தொடர்ந்து, இரவு, 7:30 மணிக்கு, முருகப் பெருமான், வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கல்யாண உற்சவம்:
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக்கம் தேனுபுரீசுவர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில், வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடந்தது. மாலை, 7:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானின் அருளைப் பெற்றனர். அதேபோல, சென்னை வடபழனி, கந்தக்கோட்டம், கந்தாஸ்ரமம், குன்றத்துார், திருப்போரூர், வல்லக்கோட்டை ஆகிய முருகன் கோவில்களில் சூர சம்ஹார விழா விமர்சையாக அரங்கேறியது. முருகன் சூரசம்ஹாரம் செய்யும்போது, பக்தர்கள், அரோகரா என, பக்தி முழக்கமிட்டனர். கந்த சஷ்டியின் நிறைவு நாளான இன்று, அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !