திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்
திருநெல்வேலி: திருச்செந்துார் கடற்கரையில், நேற்று மாலை லட்சக்கணக்கான பக்தர்களின், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷங்களுக்கு மத்தியில், சூரசம்ஹாரம் விமரிசையாக நடந்தது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டியையொட்டி, திரளான பக்தர்கள் கோவில் வளாகத்திலும், விடுதிகளிலும் விரதம் இருந்தனர். மாலை, 4:30 மணிக்கு கோவில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. முதலில் யானைமுகனையும், பின், சிங்கமுகனையும் சுவாமி வதம் செய்தார். இறுதியில், மாமரமாக போரிட்ட சூரனை, கருணை கடவுளான சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். கடற்கரையில் கூடியிருந்த பக்தர்களின், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பக்தி கோஷம் விண்ணை பிளந்தது. சூரனை வதம் செய்ததும், விரதமிருந்த பக்தர்கள் கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். பழநி உட்பட அறுபடை வீடுகள் மற்றும் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது.