வத்திராயிருப்பில் சூரசம்ஹாரம் கோலாகலம்
வத்திராயிருப்பு, வத்திராயிருப்பில் நடந்து வரும் கந்த சஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் மத்தியில் சூரசம்ஹாரம் நடந்தது. வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியசுவாமிக்கு நடைபெறும் கந்தசஷ்டி விழா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏழு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து வழிபடுவார்கள்.
ஆறாம் நாளில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து அழித்த பின்னர் பக்தர்கள் விரதத்தைமுடித்து வீடு திரும்புவர். பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்திருவிழா அக்.20ல் கோயிலில் துவங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்களாக பல்வேறு வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் சஷ்டி மண்டபத்தில் கலைவிழாக்கள் நடந்தன.
பக்தர்கள் ஆரவாரம்: ஆறாம் நாளான நேற்று முருகப்பெருமான் சூரபத்மனை அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாககாலையில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளை விநாயகர் கோயிலில் இருந்து கந்தசஷ்டி விழா அமைப்பாளர் கதிரேசன் தலைமையில் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக காசிவிஸ்வநாதர் கோயில் வந்தனர். சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்ப வழிபாடு முடிந்த பின் மாலையில் சுப்பிரமணியசுவாமி ஊர்வலமாக முத்தாலம்மன் திடலுக்கு வந்தார். அவரை தொடர்ந்து சூரபத்மனும் ஊர்வலமாக மைதானம் வந்தார். முருகப்பெருமான் சூரபத்மனின் தலையை வெட்டி அழித்தார். மீண்டும் மறுஉருவெடுத்தபடி சூரபத்மன் உலாவந்தார். ஆறாவது முறையாக உருவெடுத்த சூரபத்மனை முருகன் தனது வேலால் குத்தி அழித்தார். பக்தர்கள் கைதட்டி, அரோகரா கோஷத்துடன் ஆரவாரம் செய்தனர். பின்னர் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் விரதம் முடிந்து வீடு திரும்பினர். விழா ஏற்பாடுகளை பக்தசபா நிர்வாகிகள் செய்தனர்.
மணவாளமாமுனிகள் வீதியுலா: ஸ்ரீவில்லிபுத்துார் மணவாளமாமுனிகள் திருநட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு மங்களாசாசனம் மற்றும் திருவீதியுலா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை மணவாளமாமுனிகள் மடத்தில், சிறப்பு பூஜைகள், அம்மடத்தின் ஜீயர் சுவாமிகள் தலைமையில் நடந்தது. பங்கேற்ற பட்டர்கள் பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி மற்றும் பெரிய திருமொழி பாடினர். பின்னர் ஆண்டாள் சந்நிதியில் மணவாளமாமுனிகள் எழுந்தருளி மாடவீதிகள் சுற்றிவந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மணவாளமாமுனி ஜீயர் சுவாமிகள் செய்திருந்தார்.