பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா
நாமக்கல்: கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா நடந்தது. நாமக்கல் - மோகனூர் சாலை, காந்தி நகரில் பிரசித்தி பெற்ற, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. நேற்று, கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடந்தது. காலை, 6:30 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. 8:00 மணிக்கு, சக்தி ஹோமம், சுப்பிரமணியர் ஹோமம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், சூரசம்ஹாரத்திற்கு புறப்படும் நிகழ்ச்சி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி, திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
* குமாரபாளையம் - சேலம் சாலை சவுண்டம்மன், மாரியம்மன் கோவில் அருகே உள்ள முருகன் கோவிலில், சூரசம்ஹார விழா நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர்.
* ராசிபுரம், கைலாசநாதர் கோவில், பாண்டமங்கலம், கபிலர்மலை, ப.வேலூர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் வெகுவிமரிசையாக சூரசம்ஹாரம் நடந்தது.
* வெண்ணந்தூர், செங்குந்தர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.