திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா: அமைச்சர் தலைமையில் ஆலோசனை!
காரைக்கால் : காரைக்கால் திருநள்ளார் சனிப்பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் சந்திரகாசு தலைமையில் கூட்டம் நடந்தது. காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சந்திரகாசு, திருமுருகன் எம்.எல்.ஏ., கலெக்டர் பிராங்களின் லால்டின்குமா, எஸ்.எஸ்.பி., ஸ்ரீகாந்த், கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை தம்பிரான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் சந்திரகாசு கூறுகையில், சனிப்பெயர்ச்சி விழாவிற்கு 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர்வசதி, குளியலறை, தற்காலிக கழிப்பறை, சிறப்பு பஸ்கள் இயக்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நளன் குளம் புதிதாக புனரமைக்கப்பட்டு நீராடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உடை மாற்றும் அறைகள், மருத்துவ உதவி வசதிகள், கோயிலைச் சுற்றி 32 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.