மலைக்கோவிலில் கார்த்திகை தீப விழா
காரிமங்கலம்: காரிமங்கலம், மலைக்கோவிலில் கார்த்திகை தீப விழா நடந்தது. காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மஹா தீபத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. காலை 5 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அருகிலுள்ள மலை உச்சியில் அண்ணாமலையார் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், குருக்கள் பிரகாஷ், செயல் அலுவலர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். * காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மஹா தீபத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். * தர்மபுரி, கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், ஒகேனக்கல் ஸ்ரீ தேசநாதேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மஹா தீபமும் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்து வழிபட்டனர்.