உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் தரிசனம்

திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம்: பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி, நேற்று, கல்யாண உற்சவர் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி மற்றும் லட்சார்ச்சனை விழா, 20ம் தேதி துவங்கியது. விழாவை ஒட்டி, தினமும், காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

நேற்று முன்தினம், மாலை, உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. நேற்று, காலை, 11:00 மணிக்கு காவடி மண்டபத்தில், கல்யாண உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, கல்யாண சீர்வரிசையை, அரக்கோணம் எம்.பி., அரி, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, முன்னாள் நகர்மன்ற தலைவர், சவுந்தர்ராஜன், ஆகியோர் காவடி மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின், கல்யாண உற்சவருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப் பெருமானை தரிசித்தனர்.

மணவாள நகர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் அமைந்துள்ளது மங்கள ஈஸ்வரி உடனுறை மங்கள ஈஸ்வரர் கோவில். இந்த கோவில் வளாகத்தில், வள்ளி, தெய்வானை சமேத மங்கள சுப்ரமணி சுவாமி சன்னதி உள்ளது. இங்கு, 22ம் ஆண்டு, கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா, 20ம் தேதி துவங்கியது. தினமும், காலை, 8:00 மணிக்கும், மாலை, 7:00 மணிக்கும் லட்சார்ச்சனை விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நேற்று நடந்தது. காலை, 10:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் வள்ளி, தெய்வானை சமேத மங்கள சுப்ரமணியருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. பின், தொடர்ந்து காப்பு கட்டி, புத்தாடை அணிவித்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத மங்கள சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதன் பின், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், மணவாள நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த,திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !