உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

வத்திராயிருப்பு முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடந்த கந்தசஷ்டி விழா திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் கந்தசஷ்டி விழா அக்.20 ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நாமக்கல் ராமகிருஷ்ணா ஆஸ்ரம தலைவர் பூரண சேவானந்த மகராஜ் சுவாமிகள் துவக்கி வைத்தார். கடந்த 6 நாட்களாக சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். மாலையில் ஆன்மிகச்சொற்பொழிவு, பரதநாட்டியம், பஜனை, இன்னிசை கச்சேரிகள் உட்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏழாம் நாளான நேற்று முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கும் தேவியருக்கும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. உற்ஸவர் வெண்பட்டு உடுத்தி மணக்கோலத்தில் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அரோகரா கோஷம்:
அவரை தொடர்ந்து வள்ளி ஆரஞ்சு நிற பட்டிலும், தெய்வானை பச்சை பட்டு உடுத்தியும் மணப்பந்தலில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு பூணுால் அணிவிக்கும் நிகழ்ச்சி , மாலை மாற்று வைபவம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் தேவியர் இருவருக்கும் தாலி அணிவித்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க பூக்களை துாவி வணங்கினர். பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை சஷ்டி விழா அமைப்பாளர் கதிரேசன், கோயில் நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன், செய்தனர். இதுபோல் விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திருக்கல்யாணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !